காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் வருவாய்த்துறையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் இந்த பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை பாதிக்கும். கிராம நிர்வாக அலுவலர் இல்லாத இடங்களை இன்னொரு கிராமத்திற்கான நிர்வாக அலுவலர்கள் கூடுதலாக கவனித்துக்கொள்கின்றனர்.

இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது ஒருபுறமிருக்க, பொதுமக்களும் நினைத்த நேரத்தில் தங்களுக்கு தேவையான சேவையை பெற முடிவதில்லை. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடப்பாண்டில் எந்த பணியாளர் தேர்வும் நடைபெறவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். விரைவாக போட்டித்தேர்வுகளை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்து நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை வலுப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com