வேலூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு கோட்டையை சுற்றிப்பார்த்தார்

வேலூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணி மேற்கொண்டார். #Governor #TamilNadu
வேலூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு கோட்டையை சுற்றிப்பார்த்தார்
Published on

வேலூர்,

வேலூரில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது கோட்டையையும் சுற்றிப்பார்த்தார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேலூரில் நேற்று ஆய்வு செய்து, சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் நேற்று காலை காட்பாடி காந்திநகர் மற்றும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பஸ் நிலையத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் குப்பைகளை கூட்டிய அவர், தனது கைகளாலேயே குப்பைகளை அள்ளி கூடையில் போட்டு தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். அங்கிருந்த ஒரு பெண்ணிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கொடுத்து படிக்க சொன்னார்.

பின்னர் சுற்றுலா மாளிகையில் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 39 பேர் மட்டுமே மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனு கொடுக்க வந்திருந்த தஞ்சி மந்திரி (வயது 70) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசினர்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலையில் வேலூர் கோட்டைக்கு சென்றார். அங்கு அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளை பார்வையிட்ட அவர், கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக காட்பாடி விருதம்பட்டில் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். காட்பாடிக்கு கவர்னர் வந்தபோது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சிலர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கருப்புக்கொடி காட்ட முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடுத்து நிறுத்தியதால் கருப்புக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com