விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை
Published on

விழுப்புரம்

தக்காளி

தக்காளி விலையானது கடந்த 1 மாதத்துக்கும் மேலாக, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு உயர்ந்துகொண்டே சென்றது. அண்டை மாநிலங்களில் பெய்த தொடர் மழை மற்றும் தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களினால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே தக்காளியின் விலை தாறுமாறாக எகிறியது.

விழுப்புரத்தை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலரும் சமையலுக்கு தக்காளி சேர்ப்பதை அறவே தவிர்த்தனர்.

வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் மழை ஓய்ந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக தக்காளியின் விலையும் ஓரளவு குறையத்தொடங்கியது. கடந்த 5 நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதுபோல அங்கிருந்து விழுப்புரத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மேலும் விலை குறைந்து காணப்பட்டது.

2 கிலோ ரூ.100-க்கு விற்பனை

விழுப்புரம் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் சாலையோர சிறுவியாபார கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள், சரக்கு வாகனங்களில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டது. இதனால் அக்கடைகளுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்று தக்காளியை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தக்காளி விலை மேலும் குறையும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com