விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.48 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.48 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.48 சதவீதம் தேர்ச்சி
Published on

விழுப்புரம்

பிளஸ்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 96 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது.

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 86 பள்ளிகளில் இருந்தும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 62 பள்ளிகளில் இருந்தும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 41 பள்ளிகளில் இருந்தும் ஆக மொத்தம் 189 பள்ளிகளில் இருந்து 11,228 மாணவர்களும், 11,080 மாணவிகளும் என மொத்தம் 22,308 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

87.48 சதவீதம் தேர்ச்சி

இதில் 9,174 மாணவர்களும், 10,341 மாணவிகளும் என மொத்தம் 19,515 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.71, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.33. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 87.48 ஆகும்.

கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்-1 தேர்வில் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-1 தேர்வில் 91.96 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை காட்டிலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-1 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 4.48 சதவீதம் குறைந்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

27-வது இடம்

இருப்பினும் தற்போது பெற்றுள்ள இந்த தேர்ச்சியின் மூலம் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் சற்று முன்னேறி 27-வது இடத்தை பிடித்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவு பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வெளியிட்டார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டிவனம் கிருஷ்ணன், விழுப்புரம் (பொறுப்பு) காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், வெங்கடேசபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com