எட்டயபுரம்:
உலக யோகா தினத்தை முன்னிட்டு விளாத்திகுளத்தில், போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளத்திக்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு யோகா பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ் அமுதன் மற்றும் யோகா இயற்கை மருத்துவர் ஜனார்சன் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு யோகாசனங்களை பயிற்றுவித்தனர். இதில் விளாத்திகுளம் உட்கோட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர். அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் போலீசாருக்க மா, பலா, வாழை பழங்களும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.
இதேபோன்று விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் உலக யோக தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் தங்கமணி தலைமை தாங்கி யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை (பொறுப்பு) உமா மகேஸ்வரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கவுதமன், உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவ அதிகாரி விஜயலதா மற்றும் மருந்தாளுனர் பழனிமுத்தம்மாள், பணியாளர் குழந்தைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு என். சி. சி. மாணவ தொண்டர்களுக்கு யோகாசனம், மூச்சுபயிற்சி அளித்தனர். வல்லாரை மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கி பயன்பாடு செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் என். எஸ். எஸ். மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.