

சென்னை,
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “2024 ஆண்டு நவம்பர் 6-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட கனவுத் திட்டம்தான் இன்று கோவையின் புதிய அடையாளமாக உயர்ந்து நிற்கும் ‘பெரியார் அறிவுலகம்’. கோவையின் மண்ணில் ஒரு கட்டடத்திற்கான அடிக்கல் மட்டும் நாட்டப்படவில்லை; அடுத்த தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கான விதையும் விதைக்கப்பட்டது..
ரூ.300 கோடி மதிப்பீடு, 6.98 ஏக்கர் நிலப்பரப்பு, 1.98 லட்சம் சதுர பரப்பளவில், ஏழு தளங்கள் எனப் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் இந்த அறிவுக் கோட்டையை, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த அறிவுலகம், ஆயிரமாயிரம் இளம் உள்ளங்களில் பகுத்தறிவின் வெளிச்சத்தைப் பரப்பும்; உதயசூரியனாய் அறிவை பிரகாசிக்க செய்திடும்; சிந்தனையை வளர்த்திடும்.. இது வெறும் செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டடமல்ல; தமிழ் மாணவச் செல்வங்களின் கனவு..
ஒரு திட்டத்தை விதைத்து உருவாக்கியவரின் பெயர் நிலைத்து நிற்பதே வரலாறு.. கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை வழங்கிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு கோவை மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.