நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை: 1-ந்தேதி முதல் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு

நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு வரும் 1-ந்தேதி முதல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை: 1-ந்தேதி முதல் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு
Published on

சென்னை,

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2002-2003-ம் ஆண்டு காரீப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் தர நிர்ணயத்திற்கு உட்பட்டு அதன் முகவராக செயல்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2022-2023-ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்தில் 21.8.2023 வரை, 3,526 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5 லட்சத்து 20 ஆயிரத்து 503 விவசாயிகளிடம் இருந்து 43 லட்சத்து 84 ஆயிரத்து 226 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2023-2024-ம் ஆண்டு பருவத்தில், தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கூடுதல் ஊக்கத்தொகை

இந்த ஆண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு, குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, காரீப் 2023-2024-ம் ஆண்டு பருவத்திற்கான நெல் கொள்முதலை 1.9.2023 முதற்கொண்டு மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க மத்திய அரசு, தமிழ்நாட்டில் காரீப் 2023-2024-ம் ஆண்டு பருவத்திற்கான நெல் கொள்முதலை 1.9.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு காரீப் 2023-2024-ம் ஆண்டு பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், கே.எம்.எஸ். 2023-2024-ன் ஆண்டு கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்தார்.

1-ந் தேதி முதல்.....

அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையை 1.9.2023 முதல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com