

சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக நட்பு ஏற்படுத்தி, ஏராளமான பெண்களை காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்து, அவற்றை புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு குற்றம் சாட்டப்பட்டவர், பணம் தர மறுத்த பெண்களின் அந்தரங்க படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து முகநூலில் பதிவேற்றி இருக்கிறார்.
இந்த கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தினுடைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இதர மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற சூழலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் காவல்துறையினர் மட்டும் விசாரித்தால் திறம்பட வழக்கை நடத்த முடியாது.
உள்ளூர் நிர்ப்பந்தங்களும் இருக்கும் என்பதால் மத்திய புலனாய்வு துறையின்(சி.பி.ஐ.) கீழ் விசாரணை நடத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும். எனவே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.