கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - 4 போலீசார் சஸ்பெண்ட்

ரவுடி ஆதிகேசவன் கொலை செய்யப்பட்ட இடம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதி என்ற ஆதிகேசவன் (வயது 23). இவர்மீது சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆதி, ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், ரவுடி ஆதியின் பெண் தோழியான சுசித்ரா (21) என்பவர் கடந்த மாதம் பிரசவத்திற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 7-வது மாதத்தில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது.குழந்தை இறந்து பிறந்ததால் சுசித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்தார். இதனால் சுசித்ராவிற்கு ஆறுதல் கூறுவதற்காக ரவுடி ஆதி இரவோடு இரவாக தனது மற்றொரு தோழியான சாருமதி (23) என்பவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.அங்கு இறந்துபோன குழந்தையை பார்த்த பின்னர் பிரசவ வார்டுக்கு எதிரே உள்ள பார்வையாளர்கள் தங்கும் இடத்தில் சாருமதியுடன் ஆதி நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கினார்.
இதற்கிடையே நேற்று அதிகாலை 3.45 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஆதியை கொலை செய்ய ஆஸ்பத்திரியில் புகுந்தன. இதில் 3 பேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்தனர். 3 பேர் மட்டும் ஹெல்மெட் அணிந்தவாறு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைந்து ரவுடி ஆதியை தேடினர்.அவர் இருக்கும் இடம் தெரிந்ததும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஆதியின் தலையில் வெறி கொண்டு வெட்டியதில் அவரது தலை சிதைந்தது.இதனால், தூங்கி கொண்டிருந்தபோதே ரவுடி ஆதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அலிபாய், கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், உதவி ஆணையர் துரை ஆகியோருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.






