திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்- நடந்தது என்ன? ஐ.ஜி.அஸ்ரா கர்க் விளக்கம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஐஜி அஸ்ரா கர்க் கூறினார்.
சென்னை,
திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது 4 சிறார்கள் கஞ்சா போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறார்களில் ஒருவர் மட்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூன்று சிறார்கள், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய திருத்தணி சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருத்தணி அருகே தாக்குதலுக்குள்ளான ஒடிசா இளைஞர் வேலைக்காக தமிழகத்திற்கு வரவில்லை. அவர் அவ்வப்போது ரயிலில் அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு பயணித்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் சுற்றுலா நோக்கில் வந்துள்ளார். அந்த புறநகர் ரயிலில் ஒடிசா இளைஞரை பார்த்த 4 சிறுவர்கள், அவர் தங்களை முறைக்கிறார் என தவறாக கருதி, அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்ததும் ரயில்வே போலீஸார் அந்த இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். மருத்துவமனையில் அவர் கைப்பட ஒரு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார். அது அவருடைய தனிப்பட்ட முடிவு.
அதை கட்டாயப்படுத்தி இங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூற முடியாது. அவருக்கு அரசு சார்பில் சிறப்பான சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. வடமாநில இளைஞரை தாக்கிய 4 சிறுவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்திகளும், இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் 3 பேர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 4 சிறுவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில், உச்சபட்ச பிரிவான 307 (கொலை முயற்சி) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர் என்பதற்காக அந்த நபர் தாக்கப்படவில்லை. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை. தாக்குதலுக்குள்ளான நபருக்கு எத்தனை இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.
“இது சமூக வலைத்தளங்களின் காலம் என்பதை போலீசாரும் உணர்ந்துள்ளோம். மாணவர்கள் மோதல்கள், சிறார்களின் ரீல்ஸ் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல வழக்குகளில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்குகிறோம். சிறார் விவகாரங்களில் எல்லாவற்றிற்கும் சட்ட நடவடிக்கையே தீர்வு என போலீசார் செயல்பட முடியாது” என்று அவர் தெரிவித்தார்.






