என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக பட்ஜெட் 13-ந்தேதி தாக்கல் ஆகிறது. மேலும் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.

2.15 மணிநேரம் நீடித்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. எனவே அரசுப் பள்ளி மாணவர்கள், தொழில் கல்வி படிப்பதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்யவும், டெல்லி ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மற்ற தொழில் கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமசோதா நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2016-21-ம் ஆண்டின் அ.தி.மு.க. ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி இடைக்கால பட்ஜெட்டை அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக அதிக நிதிச்சுமை உள்ளதாகவும், ஆனாலும் கடன் அளவு போன்றவை கட்டுக்குள் இருப்பதாகவும் அ.தி.மு.க. அரசு அறிவித்தது.

சட்டசபை தேர்தலுக்குப்பிறகு கடந்த மே 7-ந் தேதி தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து மே 21-ந் தேதி சட்டமன்றம் கூடியது. அன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அந்த கூட்டத் தொடர் மே 24-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் நீடித்ததால், கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் கவர்னர் கூட்டி இருக்கிறார்.

அன்று, 2021-22-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) அவைக்கு அளிக்க வேண்டும் என்று கவர்னர் தெரிவித்துள்ளார். அதன்படி, 2021-22-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை 13-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பட்ஜெட் உரையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் படிப்பார். பின்னர் பட்ஜெட் பற்றிய விளக்கத்தை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் வெளியிடுவார். இந்த பட்ஜெட்டை காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

சட்டசபையில் பட்ஜெட் உரை படிக்கப்பட்டதை தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடும். பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அப்போது என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தொழில் கல்விகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட சில முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், கொரோனா காலகட்டத்தில் அரசு மேற்கொண்ட பல்வேறு செலவுகள், அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி போன்றவை பற்றிய கேள்விகளை, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் எழுப்பும்.

எனவே காரசாரத்துடன் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதை மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரை எதிர்கொள்ளும். எனவே வழக்கமான பரபரப்பை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்பார்க்கலாம்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 16-ந் தேதி (திங்கட்கிழமை) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com