

சென்னை,
1994-95 நிதியாண்டில் வி.கே.சசிகலா தாக்கல் செய்த வருமான வரி கணக்கை வருமான வரித்துறை 1996-ம் ஆண்டு ஆய்வு செய்தது. அதன்படி, ரூ.48 லட்சத்தை செலுத்தும்படி சசிகலாவுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வருமானவரித்துறை உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கடந்த 2008-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
திரும்பப் பெறவேண்டும்
இந்தநிலையில், சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ரூ.1 கோடி அல்லது அதற்கு கீழ் உள்ள வருமானவரி பாக்கி அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொருந்தாது
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திக்குமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதால் அவருக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சசிகலா தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற செப்டம்பர் 8-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.