நடிகர் விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை

சீனா நாட்டு செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடிகர் விஜய்யின் உறவினரும், ‘மாஸ்டர்' பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நடிகர் விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை
Published on

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருந்து 9 புகழ் மிக்க செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. செல்போன் உதிரி பாகங்களை பெற்று அவற்றை முழுமையான செல்போனாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகளை அந்த தொழிற்சாலை வளாகத்திலேயே ஓப்போ உள்ளிட்ட 2 சீனா நாட்டு செல்போன் நிறுவனங்கள் வைத்துள்ளன. அத்துடன், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் செல்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், சீனா நாட்டு செல்போன் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன்பேரில், சீனா நாட்டு செல்போன் நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ள சீனா நாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

ஆவணங்கள் பறிமுதல்

தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில், சீனா நாட்டு செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது சென்னையை சேர்ந்த சேவியர் பிரிட்டோ என்பவரின் நிறுவனம் என்று தெரியவந்தது. இவருடைய நிறுவனத்திலும் ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் உள்ள சேவியர் பிரிட்டோவின் வீடு, மயிலாப்பூர் மற்றும் மண்ணடி, இருங்காட்டு கோட்டையில் உள்ள நிறுவன அலுவலகம் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜயின் உறவினர்

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

சீனா நாட்டு செல்போன் நிறுவனங்கள், மிகப்பெரிய அளவில், வருமான வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது. அதனடிப்படையில் சீனா நாட்டு செல்போன்களை யாரெல்லாம் இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்கள் என்ற தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் அந்த நிறுவனங்களில் சோதனைக்கான சரியான நேரம் கிடைத்ததும் சோதனை தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது வரை வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செல்போன் நிறுவனத்திற்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக, வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் வடிவிலான ஆதாரங்களும் சிக்கி உள்ளன. சோதனை முடிந்த பின்னர் தான் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் எவ்வளவு? ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? என்பது எல்லாம் தெரியவரும். அதற்கு பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது ஓரிரு நாட்களில் தெரியவரும். சேவியர் பிரிட்டோ திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைப்பட வினியோகஸ்தராகவும் இருக்கிறார். அத்துடன், கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் வெளியான மாஸ்டர்' திரைப்படத்தை இவர் தயாரித்து உள்ளார். இவர் நடிகர் விஜய்யின் உறவினர் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com