சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமாக நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இங்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல கப்பல், லாரி, ரெயில் உள்ளிட்டவற்றில் இருந்து பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் மற்றும் பல்வேறு மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு 3 நிறுவனங்களும், பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு 1 நிறுவனமும் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தேவையான மின்சாதன பொருட்களை வினியோகம் செய்ததில் பல முறைகேடுகள் நடப்பதாக வருமானவரித் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த 4 நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் 4 நிறுவனங்களும் போலியாக ரசீதுகளை தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

40 இடங்களில் வருமானவரி சோதனை

அதனடிப்படையில், சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தியாகராயநகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி ஆகிய இடங்களில் உள்ள இந்த 4 நிறுவனங்களின் தலைமை அலுவலகம், இயக்குனர்களின் வீடுகள், மின்சார வாரியத்துக்கு பொருட்களை வினியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 40 இடங்களில் 250 அதிகாரிகள் வருமானவரி சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னையை அடுத்த சிறுசேரி, சிப்காட் வளாகத்திலும் தனியார் நிறுவனம், பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் வடமாநில நிறுவனம் மற்றும் இண்டர்பேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.

போலி ரசீது ஆவணங்கள் பறிமுதல்

புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் மகேந்திர ஜெயின், சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்சார வாரிய அதிகாரி காசி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இதில் அனல்மின்சார நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் உள்பட மின்சாதன பொருட்கள் வாங்கியது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரி காசியிடம் விசாரணை நடந்தது.

இதேபோல், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும் வருமானவரி துறை அதிகாரிகள் நேரடியாக சென்று, அங்கு பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தரமானதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? அவற்றின் விலை, நிதி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் போலி ரசீதுகள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

தொடர்ந்து சோதனை ஓரிரு நாட்கள் தொடர வாய்ப்பு உள்ளதால், அது முடிந்த பின்னரே வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு, ரொக்கம் குறித்து முழுமையாக தெரியவரும் என்று வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com