வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: மின்சார தேவை 44 கோடி யூனிட்டாக அதிகரிப்பு

கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்குநாள் உயர்ந்து வருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின்சார நுகர்வுடன் ஒப்பிடும்போது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் தொடங்கும் நேரத்தில் அதிகப்படியான மின்சார நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டின் அதிகபட்ச மின்சார நுகர்வை கடந்த மார்ச் 30-ந்தேதி 42 கோடி யூனிட் என்ற அளவை எட்டியது.

இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி 44 கோடி யூனிட் மின்சார நுகர்வு இருந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 44 கோடி யூனிட்டுகளை தொட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிக மின்சார நுகர்வு. முந்தைய காலங்களில் அதிகபட்சமாக மார்ச் 29-ந்தேதி ஒட்டுமொத்த மின்சார நுகர்வு 42 கோடி யூனிட்டாகும். இதன் மூலம் முந்தைய சாதனையை தமிழ்நாடு முறியடித்தது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி இருந்த 42 கோடி யூனிட் என்ற உச்ச பயன்பாட்டை விட 63.4 லட்சம் யூனிட்டுகள் அதிகம். கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான மின்சார பயன்பாட்டு நிறுவனம் இன்னும் கூடுதல் மின்சார தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.

இம்மாத இறுதியில் மின்சாரத்தின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை கடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மின்சார வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் மின்சார தடை பிரச்சினையாக மாற கூடாது.

மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார வாரியம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர வினியோகம் நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com