ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு: தமிழக சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக தமிழக சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு: தமிழக சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? மற்றும் சளி, இருமல் உள்ளிட்ட வேறு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். மேலும் எந்தவித நோய் பாதிப்பும் இல்லை என்று சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் 2 தவணை காரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதாவது, புளியரை சோதனை சாவடியில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ முகாமில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் பணியில் இருந்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா அறிவுரைப்படி இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில் வட்டார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள், கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்து உள்ளனரா? என்று சோதனை செய்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், ஒரு தடுப்பூசி மட்டும் சலுத்தி இருந்தால் அங்கிருந்து வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பெறப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இரண்டும் இல்லாத பட்சத்தில் அவர்களை புளியரை சோதனை சாவடியில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com