கூத்தாநல்லூர் பகுதி வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் பகுதி வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர் பகுதி வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

குறுவை சாகுபடி பணிகள்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டிலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு குறுவை, சம்பா-தாளடி நெல் சாகுபடி மற்றும் உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறு ஆகிய ஆறுகளில் வரக்கூடிய தண்ணீரையே எதிர்பார்த்து ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

தண்ணீர் திறப்பை அதிகரிக்க கோரிக்கை

ஆனாலும் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளதாகவும், காடுவெட்டி, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம் மற்றும் வெண்ணாறு செல்லக்கூடிய பிற ஊர்களிலும், வெண்ணாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணையை கூட தாண்டி செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக தண்ணீர் செல்வதாகவும், இதனால், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் உள்ளதாகவும், அதனால் வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்த செய்தி கடந்த 29-ந்தேதி 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பை அதிகப்படுத்தினர். அதன்படி வெண்ணாற்றில் நேற்று அதிகளவில் தண்ணீர் சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com