

சென்னை,
நெல்வரத்து அதிகரிப்பால் வரும் மாதங்களில் அரிசி விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில், நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதற்கிடையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யாததால் பல மாநிலங்களில் நெல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்தது. தீபாவளி பண்டிகைக்குள், அரிசி கிலோ 100 ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். வெளிமாநில நெல் வரத்தைத் தடுத்து நிறுத்துவதை நிறுத்தி, உடனடியாகக் கொள்முதலை அதிகரித்துச் சேமிக்கவில்லை எனில், தமிழகத்தில் கடுமையான அரிசி பஞ்சம் ஏற்படும் என நெல் வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜென்டுகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வலுத்தன.
இதனையடுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 49 அமுதம் அங்காடிகளிலும், 201 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நெல் அறுவடை முழுவீச்சில் தொடங்கி உள்ளது. அங்கிருந்து தமிழகத்தில் அரிசி ஆலைகள் உள்ள, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் செங்குன்றம் சந்தைக்கும் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 220-க்கும் மேற்பட்ட லாரிகளில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நெல் மூட்டைகள் குவிந்தன. இதனால், தீபாவளி நேரத்தில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பில்லை. வரும் மாதங்களில் அரிசி விலை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.