

கோவை,
முன்னணி பம்ப் உற்பத்தி சங்கங்களான இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மிதுன் ராம தாஸ், ராஜ்கோட் பொறியியல் சங்க இயக்குனர் நரேந்திரபாய் அட்ரோஜா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோட்டார் பம்ப் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள், தளவாடங்கள், எரிசக்தி மற்றும் செலவுகளில் ஏற்பட்ட முன் எப்போதும் இல்லாத உயர்வால் கவலை அடைகிறோம். இந்த உயர்வு, பம்ப் உற்பத்தியாளர்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
செம்பு, அலுமினியம், துருப்பிடிக்காத எக்கு, சிலிக்கான் எக்கு, வார்ப்பு இரும்பு, கேபிள்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய பொருட்களின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக அதிகரித்து உள்ளன. கடந்த மாதம் 31-ந்தேதி வரை படிப்படியாக விலை திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் உற்பத்தியாளர்களால் இந்த விலை உயர்வை முழுமையாக ஈடுசெய்ய முடியவில்லை. மேலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இது வரை செயல்படுத்தப்பட்ட விலை திருத்தங்கள் இருந்தும் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடுகையில், பம்புகளின் விலை 10 சதவீதம்வரை உயர்த்தப்படுகிறது.
இது குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மோட்டார் அமைப்பில் உள்ள குழாய்கள், கேபிள்கள், கயிறுகள், ஸ்டார்ட்டர் பேனல்கள், வால்வுகள் மற்றும் இணைப்புகள் போன்ற பிற கூறுகளின் விலை 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்திய தர நிர்ணய விதிமுறைகளின்படி நம்பகமான, ஆற்றல் திறன் கொண்ட நீரேற்றுத் தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளோம்.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் ஆதரவளிக்கும் அதே வேளையில், ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்புகளை ஊக்கு விப்பதற்காக, மோட்டார் பம்ப் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இத்தகைய நடவடிக்கை, தரமான பம்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், மின்சார நுகர்வை குறைத்து, தேசிய ஆற்றல் திறன் இலக்குகளுக்கு ஆதரவளித்து, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையை வலுப்படுத்தும். ஜி.எஸ்.டியை குறைப்பதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப் பைவிட, குறைந்த மின்நுகர்வின் வாயிலாகக் கிடைக்கும் சேமிப்பே கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.