சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்

கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்
Published on

நீலகிரி,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளாதால், வருகிற மே 1-ந்தேதி முதல் நீலகிரியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள், காட்டேரி சந்திப்பில் இருந்து சேலாஸ் மற்றும் லவ்டேல் வழியாக நகருக்குள் வர வேண்டும். அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடலூர் மற்றும் தெப்பக்காடு செல்லும் வாகனங்கள் லவ்டேல் சந்திப்பு மற்றும் காந்தள் முக்கோணம் வழியாக திருப்பி விடப்படும்.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆவின் வாகன நிறுத்துமிடம் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானங்களில் நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அரசு சுற்றுலா பேருந்துகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். குன்னூர் பர்லியார் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பால் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர, மற்ற கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com