கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு
Published on

தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று கடந்த 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் 8-ந் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரியை சென்றடைந்தது.

1,700 கனஅடியாக அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இத்தனை நாட்களாக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 661 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.46 அடியாக பதிவானது. 1.222 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 841 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com