

மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 633 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணை
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத்து காணப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 636 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 633 கனஅடியாக அதிகரித்துள்ளது.
38.60 அடியாக உயர்வு
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்தானது, தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகரித்து உள்ளதால் அணைநீர்மட்டமும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 10-ந் தேதி அணை நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு குறைந்தது
இதனிடயே நேற்று மாலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறையும் சூழல் ஏற்பட்டு உள்ளது.