கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 964 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.02 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும், நேற்று முன்தினம் இரவு சூளகிரி, சின்னாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், மார்க்கண்டேய நதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அதன்படி நேற்று பிற்பகல் வினாடிக்கு 5,829 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.25 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 5,212 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணி, வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்கிறது. இதனால், அந்த வழியாக கே.ஆர்.பி. அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பாறு, சின்னாறு அணைகள்

சின்னாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 95 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை வினாடிக்கு 284 கனஅடியாக அதிகரித்தது. அணையில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 420 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 824 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.71 அடிக்கு உள்ளது. இதனால் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

மழை அளவு

மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சூளகிரி-97, சின்னார் அணை-95, ஓசூர்-62, கிருஷ்ணகிரி-49.10, பெனுகொண்டாபுரம்-40.30, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை- 37, தேன்கனிக்கேட்டை-35.40, போச்சம்பள்ளி-34.40, நெடுங்கல்-34, ஊத்தங்கரை-24.20, பாம்பாறு அணை-22, பாரூர்-21, கெலவரப்பள்ளி அணை-20, ராயக்கோட்டை-20, அஞ்செட்டி-15, தளி-10.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com