ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Published on

கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டதாலும், தமிழக அரசால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுவதாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால், குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்பட்டது. கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 7000 கன அடி தண்ணீர் வெண்ணாறு பாசனத்திற்கு வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான பாசனம் வெண்ணாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் மூலமாகவே நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் வெண்ணாற்றியில் திறந்து விடப்பட்ட 7000 கன அடி தண்ணீர் அதன் கிளை ஆறுகளில் பிரித்து வினியோகிக்கப்படுகிறது. இதனால் வெட்டாறு, ஓடம்போக்கி ஆறு, வாழ வாய்க்கால், காட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் கரைகளில் உள்ள மரங்களில் இருந்து ஆற்றை நோக்கி வளைந்துள்ள கிளைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது. இந்த ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.

குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள்

இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்கால் தயாரித்தல், வயல்களுக்கு தண்ணீர் விடுதல், வயல்களை டிராக்டர் கொண்டு உழுது சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை சாகுபடி முழுமையாக தொடங்கும் வரை முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து குறைந்தது 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் வினியோகம் செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com