

சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே ஏரிகளின் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே ஏரிகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்த இருப்பு 10.31 டி.எம்.சி ஆக இருக்கிறது. இதனால் சென்னை மாநகருக்கு தினசரி 1,015 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.