

சென்னை,
சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில், நீர்மட்டம் 20.97 அடியாக உயர்ந்துள்ளது.
ஏரிக்கு வினாடிக்கு 1,619 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக 138 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர், சுமார் 17.5 கி.மீ. நீளம் கொண்ட கால்வாய் வழியே கடலில் சென்று சேர்கிறது. இதனால் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.