

தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையில் பரவலாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. விட்டு விட்டு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தொடும் அளவிற்கு இன்று காலையில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ள போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் காலையில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.