நவம்பர் 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நவம்பர் 1-ந்தேதி முதல் லாரிகளில் அதிகபாரம் ஏற்றுவதில்லை என்ற முடிவு செய்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நவம்பர் 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Published on: 

சென்னை,

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

லாரிகளில் அதிக பாரம்

“தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிரஷர் குவாரிகளில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் மட்டுமே லாரிகளுக்கு லோடு என்று திணித்து வருவதை கைவிட வேண்டும்.

கிரஷர் குவாரி உரிமையாளர்களின் வாகனங்களில் அதிகபாரம் ஏற்றினால் லஞ்ச லாவண்யம் பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகள் மற்ற லாரிகளை மடக்கி பிடித்து அதிகபாரம் வழக்கு பதிவு செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

லாரிகளில் அதிக பாரம் ஏற்றுதை குறைத்தால் பொருட்களின் விலை உயர்ந்து விடும் என்று அரசே கூறுவது விந்தையாக உள்ளது. அப்படி இருக்கும்போது அதிக பாரம் வழக்கு பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

லஞ்சம்

மாறாக, ஒன்றிரண்டு வாகனங்களை வைத்து மாத மாமூல் தர மறுக்கும் லாரிகளின் மீது அதிக பார வழக்கு பதிவு செய்வது என்பது மிகப் பெரிய ஜனநாயக படுகொலையாக உள்ளது.

தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசு எந்த துறையிலும் லஞ்சம் கூடாது என்று கூறி வருகையில், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து, காவல்துறையில் மட்டும் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களின் பட்டியலை வைத்துக் கொண்டு மாத மாமூல் வசூல் செய்வது இந்த அரசின் கொள்கைக்கு நேர் எதிராக உள்ளது.

வழக்கு பதிவு

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க உத்திரவான 60th The Consigner and Consignee சரக்கு ஏற்றி அனுப்புநர் மற்றும் ஏற்றி வரும் வாகன உரிமையாளர் மீது என இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு என்பது இந்நாள் வரையில் பின்பற்றாமல் இருப்பது மேலும் லஞ்ச லாவண்யத்தை ஊக்குவிப்பதாகும்.

கடந்த 6 ஆண்டுகளாக சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு பிரதான காரணமான அதிகபாரம் ஏற்றுவதை கைவிட லாரி உரிமையாளர்களான நாங்கள் தயார் - அரசு தயாரா? என்ற சவாலை நாங்கள் முன்வைக்கிறோம்.

வேலைநிறுத்தம்

ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், அதிக பாரம் ஏற்றுவதில்லை என்ற தீர்க்கமான முடிவெடுத்துள்ளது மற்றும் பல கோரிக்கைகள் குறித்த தகவலை வெளிப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களை சந்தித்து உரையாற்ற உள்ளோம். அனைவரும் பங்கேற்று இதனை செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X