சுதந்திர தின விழா கொண்டாட்டம்; ஊட்டியில், கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றினார்

நீலகிரியில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டியில் நடந்த விழாவில் கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
Published on

ஊட்டி:  நீலகிரியில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டியில் நடந்த விழாவில் கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் 77-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடந்தது.

இதையடுத்து சிறப்பாக பணிபுரிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பாலாஜி, கவிதா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 207 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார். இதையடுத்து ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி ஓடக்காடு அரசு தொடக்கப்பள்ளி, தூனேரி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊட்டி காது கேளாதோர் பள்ளி, தும்மனட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேசப்பற்று குறித்து நடனம் ஆடினர். தோடர், கோத்தர், இருளர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதில் அவர்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடினர்.

இதனை சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர். முன்னதாக மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் பார்வையாளர்கள், உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கர்னல் சீனிவாசன், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ராணா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்ட கோர்ட்டில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தேசிய கொடி ஏற்றினார். இதில் நீதிபதிகள் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஏகராஜ் கொடியேற்றி ஓய்வு பெறும் நிலையில் இருந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் பத்மினி கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, கூடலூர் நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி முகமது அன்சாரி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பரிமளா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மேலும் நகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கோத்தகிரி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் வனிதா, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கோமதி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார் குமார் ஆகியோர் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி முன்புறம் உள்ள போர் நினைவு தூண், சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நேற்று எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையம் சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஆர்.சி. ராணுவ மைய துணை கமாண்டெண்ட் கர்னல் ராஜேஷ் சர்மா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com