

மதுரை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கழிவுக் காகிதங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சரக்கு கண்டெய்னர்களில் சுங்கத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி துண்டுகள், உணவுக்கழிவுகள் உள்ளிட்ட திடக்கழி வுகள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கழிவு சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அவற்றை ஏற்றுமதி செய்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இந்த கழிவுப்பொருட்களை துபாய்க்கு மறுஏற்றுமதி செய்யவோ அல்லது இந்தியாவிலேயே மறுசுழற்சி மற்றும் கழிவுகளை அழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மேலும் வளர்ந்த நாடுகள் தங்களின் கழிவுகளை வளர்ந்து வரும் நாடுகளில் கொட்டும் நடைமுறையை 'கழிவு காலனித்துவம்' என கூறுகிறார்கள். இந்தியா பிற நாடுகளின் குப்பை களை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது.
ஒரு சட்டவிரோத செயலை மற்றொரு சட்டவிரோத செயல்பாடு மூலம் சரிசெய்ய முடியாது. இந்தியாவிலேயே அந்த கழிவுகளை அழிக்க அனுமதிப்பது பொதுகொள்கைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கத்திற்கும் எதிரானது.
எனவே மேற்கண்ட கழிவுகளை துபாய்க்கு மறு ஏற்றுமதி செய்யவோ அல்லது இந்தியாவிலேயே அழிக்கவோ அனுமதிக்க முடியாது. அந்த கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே மீண்டும் அனுப்பப்பட வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.