

சென்னை,
கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு சிமெண்டு விற்பனை கடுமையான வீழ்ச்சியடைந்தப்போதிலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மூலம் எழுச்சியை அடைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-2021 நிதி ஆண்டில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.222 கோடி ஆகும். 2019-2020 நிதி ஆண்டில் இது ரூ.36 கோடி இழப்பாக இருந்தது.
2019-2020-ல் சிமெண்டு, கிளிங்கர் விற்பனை 110 லட்சம் டன் ஆக இருந்தது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரத்து 85 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் 2020-2021-ல் சிமெண்டு, கிளிங்கர் விற்பனை 89 லட்சம் டன் ஆக குறைந்தது. இதனால் மொத்த வருமானம் ரூ.4 ஆயிரத்து 460 கோடியாக குறைந்துள்ளது.
4-வது காலாண்டு
இதேபோல கடந்த நிதி ஆண்டில் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-வது காலாண்டின், வரிக்கு முந்தைய வருவாய் ரூ.213 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வரிக்கு முந்தைய வருவாய் ரூ.85 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வரிக்கு முந்தைய வருவாய் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
சிமெண்டு தேவை உயரும்
கடந்த நிதி ஆண்டின் 4-வது காலாண்டை பொறுத்தமட்டில் எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள், பேக்கிங் செலவு உள்ளிட்ட உள்ளீட்டு மூலப்பொருட்கள், தொழிலாளர்களுக்கான கூலி ஆகியவை கடுமையான உயர்வினை கண்டிருந்தது. நிலையான சிமெண்டு விலையினாலும், மேம்பட்ட இயக்க செயல்திறன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இத்தகைய செலவு அழுத்தங்களை தாங்கிக்கொண்டு, குறிப்பிடத்தக்க நிலையை எட்டியிருக்கிறது. கொரோனா பாதித்துள்ள ஆண்டில் தங்கள் நிறுவனத்தின் செயல்திறன் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரும், தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான என்.சீனிவாசன் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் இருந்து பணியாற்றுவது அதிகரித்துள்ளது. இதோடு வீடுகள் கட்டுதல், வீடுகளை புதுப்பித்தல் செய்வது அதிகரித்து உள்ளதால் சிமெண்டு விற்பனை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021-2022 விரிவாக்க பட்ஜெட், வளர்ச்சிக்கு தூண்டுதலை அளித்து உந்து சக்தியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டுமானங்கள், சாலைகள், தென்மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டங்கள் அறிவித்தப்படி தொடங்கப்பட்டால் சிமெண்டுக்கான தேவை அதிகரிக்கும். இதை வைத்து பார்க்கும்போது சிமெண்டுக்கான தேவை வரும் மாதங்களில் உயரும் என்று கருதுகிறோம் என்றார்.
என்.சீனிவாசன் மீண்டும் தேர்வு
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 5 ஆண்டுகளுக்கு அவருக்கு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பு நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.