அமெரிக்காவிற்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இது தவிர அஞ்சல் சேவைக்கான சுங்க கட்டணத்திலும் அமெரிக்கா மாற்றம் செய்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பார்சல்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டதற்கு இப்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்கா பிறப்பித்த உத்தரவின்படி பிறநாடுகளில் இருந்து வரும் 800 டாலர் வரையிலான பொருட்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில் அதனை அமெரிக்கா மாற்றி வரி விதிப்பதாக அறிவித்தது. அதாவது வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் 25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வரும் 25 முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு தபால் துறை மிகவும் வருந்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






