இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய இடங்களில் சென்னை மாநகர் முதல் இடம்

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகரங்களில் சென்னை மாநகரம் முதல் இடம் பிடித்துள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் கூட்டத்தில் கூறினார்.
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய இடங்களில் சென்னை மாநகர் முதல் இடம்
Published on

சேலம்,

சேலம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசில் கல்வி, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்த விதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

ஆனால் இந்த திட்டத்தை சில கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். குறிப்பாக தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க. அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டுச்சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும்போதே செய்ய வேண்டியது தானே?

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகரங்களில் சென்னை மாநகரம் முதல் இடத்தில் உள்ளது. மு.க.ஸ்டாலின் போராட்டம் நடந்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு நாற்காலி ஆசை. இந்த பதவி மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது.

தமிழகம் முழுவதும் நான்கு வழிச்சாலைகளாக 40 சாலைகள் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.

எனது உறவினர் டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அத்தனையும் பொய். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. தி.மு.க.வினர் ஒரே நாளில் ஒருவருக்கு 8 முறை டெண்டர் கொடுத்துள்ளனர். திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

வழக்கு முடிவுபெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலும் வரும் நிலை உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com