இந்தியா - ஜிம்பாப்வே போட்டி: சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே போட்டி: சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை 2026-ன் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம். டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 26, 2026 அன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.


நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, 

அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ நள்ளிரவு 12 மணிக்கும், வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் , சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை (அதாவது இரவு 11:00 மணிக்குப் பின்பு), வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும். 

பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை (Tickets) அந்தந்த மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தானியங்கி நுழைவு வாயில்களில் உங்களது QR குறியீட்டை காண்பிக்கும் போது, நுழைவதிலும், வெளியேறுவதிலும் தாமதமோ அல்லது சிரமமோ ஏற்படாமல் இருக்க, QR குறியீட்டை தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com