இயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியன்-2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம். இந்தியன்-2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com