சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 16,399 டன்னாக அதிகரிப்பு: விலை உயர வாய்ப்பு

ஈராக், குவைத், மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 16,399 டன்னாக அதிகரிப்பு: விலை உயர வாய்ப்பு
Published on

சென்னை,

ஏலக்காய் ஏற்றுமதி

இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளம் மாநிலம் சுமார் 70 சதவீத உற்பத்தியை வழங்கி வருகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்திய ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் இந்திய ஏலக்காயின் அளவு, நிறம், மணம் மற்றும் தரம் ஆகியவை பிற நாடுகளில் விளையும் ஏலக்காயை விட சிறப்பாக இருப்பதே காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது.

விலை உயர வாய்ப்பு

கடந்த 2023-24-ம் ஆண்டில் 7,083 டன்னாக இருந்த இந்திய ஏலக்காய் ஏற்றுமதி, 2025-26-ம் ஆண்டில் 16,399 டன்னாக உயர்ந்துள்ளது. இந்திய ஏலக்காயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகியவை முன்னிலையில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 135.22 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும், சவுதி அரேபியா 125.16 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்துள்ளன.

இதுதவிர வங்காளதேசம், ஈராக், குவைத், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்து வருகின்றன. இந்திய ஏலக்காய் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள வரவேற்பு காரணமாக உள்ளூர் சந்தையிலும் ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏலக்காய் சராசரி விலை கிலோ ரூ.3 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com