இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்

இந்தியக் கடலோரக் காவல் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இப்பணி உறுதிப்படுத்தியது.
இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்
Published on

சென்னை,

இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியக் கடலோரக் காவல் படையின் (ICG) கிழக்கு மண்டலத் தலைமையகம், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 17 கடற்கரைகளில் மாபெரும் தூய்மைப்பணியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தியது. சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "தூய கடல், பாதுகாப்பான கடற்கரை, நமது அடையாளம்" என்ற கருப்பொருளின் கீழ் இப்பணி நடைபெற்றது.

அசைக்க முடியாத அர்ப்பணிப்பு

இக்கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியின் மூலம் 8,200 கிலோவிற்கும் அதிகமான கடல்சார் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. கடல்சார் சூழல் மண்டலங்களைப் பாதுகாத்தல், கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் கடற்கரைப் பகுதியின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இப்பணி உறுதிப்படுத்தியது.

தன்னார்வலர்கள் பங்கேற்பு

மாநில அரசுத் துறைகள், இந்திய ராணுவம், சிஐஎஸ்எஃப் (CISF), என்எஸ்எஸ் (NSS), என்சிசி (NCC) கேடட்டுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளைச் (NGOs) சேர்ந்த சுமார் 7,700 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய பங்கேற்பானது, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது பொதுமக்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்த தன்னார்வலர்கள் கடற்கரைகளைச் சுத்தப்படுத்தினர்; அப்போது பிளாஸ்டிக் கழிவுகள், கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மட்காத கழிவுகள் ஆகியவற்றை கவனமாகப் பிரித்தெடுத்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் புதுச்சேரி ராக் பீச் (Rock Beach) கடற்கரையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கே. கைலாஷ்நாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் "தூய கடற்கரை, பாதுகாப்பான கடல்" என்ற இயக்கத்தின் ஐந்தாவது பதிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு வாயிலாக, இந்தியப் பெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதைக் குறைக்கும் வகையில், இந்நிகழ்ச்சியின்போது சேகரிக்கப்பட்ட கழிவுகளின் வகைகள் மற்றும் அளவுகள் குறித்த தரவுகள் அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com