

சென்னை,
விலை உயர்வுக்கு எதிராக வினையாற்றுக என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை பொருட்கள், எண்ணெய், அரிசி, சர்க்கரை ஆகியவை 20 சதத்திலிருந்து 35 சதம் வரை உயர்ந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் இத்தகைய பொருட்கள் பதுக்கப்படுவதும், ஆன்லைன் வர்த்தக முறையில் நவீனமான பதுக்கல் நடைபெறுவதும், அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகள் எத்தனால் உற்பத்திக்கு ஆலைகளுக்கு திருப்பி விடப்படுவதாலும் இந்த பற்றாக்குறை உருவாக்கப்பட்டு விலைகள் கடுமையாக உயர காரணமாகிறது என கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசு உடன் இதில் தலையிட்டு, பதுக்கலை தடுக்கவும், நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.