

சென்னை,
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
அதே நேரத்தில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் இளைஞர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை மீது எடுக்கப்பட்டு வரும் ஒழுங்கு நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.