மற்றவர்களின் உணர்வை மதிப்பதுதான் இந்திய கலாசாரம்: டெல்லி கலவர சம்பவங்கள் கவலை அளிக்கின்றன - வெங்கையா நாயுடு வேதனை

மற்றவர்களின் உணர்வை மதிப்பதுதான் இந்திய கலாசாரம் என்றும் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் கவலை அளிக்கின்றன எனவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேதனையுடன் தெரிவித்தார்.
மற்றவர்களின் உணர்வை மதிப்பதுதான் இந்திய கலாசாரம்: டெல்லி கலவர சம்பவங்கள் கவலை அளிக்கின்றன - வெங்கையா நாயுடு வேதனை
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள பரத கலாஷேத்ரா அரங்கத்தில் வயலின் வித்வான் எம்.சந்திரசேகரனுக்கு சத்குரு தியாகராஜா ஹம்சத்வனி என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஹம்சத்வனி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எம்.சந்திரசேகரனுக்கு விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

பின்னர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

தலைசிறந்த வயலின் இசைக்கலைஞர்கள் பட்டியலில், லால்குடி ஜெயராமன், டி.கே.கிருஷ்ணன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அடுத்து இடத்தை சந்திரசேகரன் பிடித்துள்ளார். இசை மேதையின் திறமைக்கு அங்கீகாரமாக இந்த விருது திகழ்கிறது. கலை மற்றும் கலாசாரத்தின் கோவிலாக கலாஷேத்ரா உள்ளது. மிக நீண்ட, வளமையான இசைப்பாரம்பரியத்துடன் தென்னிந்தியாவின் கலாசார நுழைவு வாயிலாகவும், கர்நாடக இசைக்கான தலைநகராகவும் சென்னை விளங்குகிறது.

யுனெஸ்கோவின் உலக படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது மிகுந்த பெருமைக்குரியது. அற்புதமான கலாசாரத்துக்கு பெயர் பெற்றது இந்தியா. பல்வேறுபட்ட ஆடைகளை அணிந்தாலும், பல்வேறு மதம், மொழிகளை, இனங்களை சார்ந்திருந்தாலும் அடிப்படையில், நாம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மை பிளவுபடுத்தும் அச்சுறுத்தல் உள்ளதாலும், நமது சமூக கலாசார பிணைப்பு பந்தத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், இது அவசியமாகிறது.

வேறுபட்ட கலாசாரங்களுக்கு மதிப்பு அளிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், பாராட்டவும் வேண்டும் என்று நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம். முடிந்தவரை தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவின் மாபெரும் புலவரான கணியன் பூங்குன்றனார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியுள்ளார். அனைத்து இடங்களும் நமக்கு சொந்தமானவை, அனைவருமே நமது சொந்தங்கள் என்பதுதான் இதன் அர்த்தம். இந்த நிலைப்பாடு, இந்தியாவின் உணர்வாக ஊடுருவும் என்று நான் நம்புகிறேன்.

பெற்றோர், பிறந்த இடம், தாய்மொழி, சொந்த நாடு, குரு ஆகிய 5 பேரை வாழ்க்கையில் என்றுமே மறந்துவிடக் கூடாது. வீட்டிலும், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழி தெரியாதவர்களிடம் வேறு மொழியில் பேசுங்கள். ஆங்கிலம் உள்பட வேறு எந்த மொழியை கற்பதிலும் தவறு இல்லை.

நமது நாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி நாம் அளித்த விருந்தை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார். அதற்கு நான், தென்னிந்தியாவுக்கு வாருங் கள். அதைவிட நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம். ஆனால் சில நேரங்களில் ஏற்படும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக அமைந்துவிடுகிறது. தற்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள நிகழ்வையும் சேர்த்தே சொல்கிறேன். மிகச்சிறந்த கலாசார பின்புலத்தைக் கொண்ட நமது நாட்டில் ஏன் மக்கள் இப்படி சண்டையிட வேண்டும்?

நமக்கு ஜனநாயகமும், நமது எண்ணங்களை வெளிப்படுத்த சுதந்திரமும் உள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் சகிப்புத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஹம்சத்வனி செயலாளர் சுந்தர், கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் மோகன் பராசரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com