ஐ.என்.எஸ். ராஜாளியில் இந்திய கடற்படையின் தொலைதூர கண்காணிப்பு கருத்தரங்கு

கருத்தரங்கில் தொலைதூர கடல்சார் கண்காணிப்பு தொடர்பான பல முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
சென்னை,
அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முக்கிய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ராஜாளியில், இந்திய கடற்படையின் கிழக்கு கமாண்ட் சார்பில், "தொலைதூர கடல்சார் கண்காணிப்பு" தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு செப்டம்பர் 16 முதல் 17 வரை நடைபெற்றது.
கடற்படை கிழக்கு கமாண்ட் பணியாளர் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சாந்தனு ஜா இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மூத்த கடற்படை அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள், போயிங் விமான நிறுவன பிரதிநிதிகள் உட்பட பல துறைசார் நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், இத்துறை தொடர்பான பல முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் அதிஉயரத்தில் நீண்ட தூரம் பறந்து முக்கிய தகவல்களை சேகரிக்கும் திறன்வாய்ந்த பி.8.ஐ. விமானம் மற்றும் ஹேல் ரக ஆளில்லா விமானங்களின் பங்களிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு படைப்பிரிவான ஐ.என்.ஏ.எஸ்.-312, பி.8.ஐ. விமானத்தை 50,000 மணிநேரம் வானில் இயக்கிய முக்கிய நிகழ்வு இதில் நினைவுகூரப்பட்டது. இந்திய கடற்படையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதல் முறையாக இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. ஐ.என்.ஏ.எஸ்.-312 ஸ்குவாட்ரன், அதிநவீன பி.8.ஐ. விமானத்தை ஐ.என்.எஸ். ராஜாளியிலிருந்து இயக்குகிறது. கடற்பரப்புகளில் இந்தியா ஆர்வம் கொள்ளும் பகுதிகளில் அது தகவல் சேகரிப்பில் ஈடுபடுகிறது.
அரக்கோணத்தில் அமைந்துள்ள கடற்படை தளமான ஐ.என்.எஸ். ராஜாளி, பி.8.ஐ. விமானத்துடன் ஹேல் ரக டிரோன்களான எம்.கியூ.-9.பி. சீகார்டியன்களையும் இயக்குகிறது. ஐ.என்.எஸ். ராஜாளி, நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புக்கான மையமாக செயல்படுகிறது.






