பழைய இரும்பு பொருட்களை ஏலம் விட்டதில் ரெயில்வேக்கு ரூ.628 கோடி வருவாய்..!

ரெயில்வே சார்பில் அக்டோபர் 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டன.
ரெயில்
கோப்புப்படம்
Published on: 

சென்னை:

நாடு முழுவதும் ரெயில்வே சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தூய்மை முகாமில் சேகரிக்கப்பட்ட பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டதில் ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சிறப்பு தூய்மை முகாம்

இந்திய ரெயில்வேயில் தூய்மையை மேம்படுத்தவும், தேவையற்ற பொருட்களை அகற்றவும் நாடு முழுவதும் சிறப்பு தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்வே மண்டலங்கள், கோட்டங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, 1.50 லட்சத்துக்கும் அதிகமான பழைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. மேலும், பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைதீர்ப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

ரூ.628 கோடி வருவாய்

கடந்த அக்டோபர் 22-ந்தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 5,884 ரெயில் நிலையங்களில் சிறப்பு தூய்மை முகாம் நடத்தப்பட்டது. அப்போது பழைய இரும்பு உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் மற்றும் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவை ஏலம் விடப்பட்டதில் ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல், தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரெயில்வே வளாகங்களில் 6.20 லட்சம் சதுர அடி இடம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

X