"பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா"... வேலூரில் 28-ம் தேதி நடைபெறுகிறது

காய்கறி மற்றும் விதை திருவிழாவில் பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா
பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு
Published on

வேலூர்,

சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (25/06/2026) வேலூர் டோல்கேட், முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, விதைத்தீவு பிரியா ராஜநாராயணன் மற்றும் மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின் நிறுவனர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினர்.

செய்தியாளர் சந்திப்பில் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் நஞ்சில்லாத உணவு உற்பத்தியும், விவசாயிகளின் பொருளாதார தற்சார்பும் மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரை இந்த மாபெரும் கருத்தரங்கில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதோடு, அவற்றை வணிக ரீதியாக எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்த நிகழ்வு அமையும்” எனக் கூறினார்.

கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள்

இயற்கை விவசாயத்தில் செலவை குறைத்து தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை விவசாயிகளுக்கு வழங்கும் விதத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் நிபுணர்களின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு அமையவுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்கும் நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர்.

கண்காட்சி

பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. இதில் காய்கறி மற்றும் கிழங்கு விதை பாதுகாவலர்கள், இயற்கை விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்டோரின் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

விதை பாதுகாவலர் விருதுகள் – 2026

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வரும் முன்னோடி விதை பாதுகாவலர்களை கௌரவிக்கும் வகையில், ‘விதைத்தீவு பிரியா ராஜநாராயணன்’ அவர்களின் ஒருங்கிணைப்பில் “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரிய பாரம்பரிய விதைகளை சேகரித்து, பாதுகாத்து, பரவலாக்கி வரும் சுமார் 10 முன்னோடி விதை பாதுகாவலர்கள் இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந்த மாபெரும் திருவிழாவில் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 83000 93777

X

Daily Thanthi
www.dailythanthi.com