

மதுரை,
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் போர் உக்கிரமடைந்துள்ளது. மேலும் இந்த அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம், கியாஸ் வர்த்தகத்தை முடக்கும் வகையில் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.
தினமும் உலகளவில் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், கியாஸில் 20 சதவீதம் இந்த பாதை வழியாக தான் பிற நாடுகளுக்கு செல்கிறது. கியாஸ் தட்டுப்பாடு குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இப்போது ஷார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது நம் நாட்டில் கியாஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சரக்கு கப்பலில் பயணித்த 23 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
இதனிடையே ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தின் 88 பேர் உள்பட 600 மீனவர்களை மீட்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை ஏப்.14ம் தேதிக்கு மேல்தான் மீட்க முடியும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிடுகையில், “ஈரானில் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவை மூடப்பட்டு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்கு மேல்தான் விமானநிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது. இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பான சூழல் நிலவினால் மட்டுமே அவர்களை மீட்க முடியும்” என்று தெரிவித்தார்.