

சென்னை,
இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக இன்று விண்ணில் பாய்கிறது விக்ரம்-1 தனியார் ராக்கெட்
தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான 36 மணி நேர கவுண்டன் நேற்று முன்தினம் தொடங்கியது.
கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் 'ஸ்கோப்' உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை சுமைகளை (Payloads) விக்ரம்-1 சுமந்து செல்கிறது. மேலும், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவுப் பரிசு பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
சுமார் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக கார்பன் கலவைப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று கட்ட ராக்கெட்டில் 3-டி அச்சிடப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
முதல் சோதனைப் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயர சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.