அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரம் பரவி இருப்பதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மு.க.ஸ்டாலின்

கோப்புப்படம்
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டியது அவசியம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
ஒன்றுபட்ட இந்தியாவிற்காக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டும் என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. தாதார் ஆங்கில நாளிதழ் ஒன்றில் முக்கியமானதொரு கட்டுரையை இன்று எழுதியுள்ளார்.
வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே மக்கள்தொகையில் சமமின்மை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டியது மிக அவசியமாகும்.
நாட்டின் கூட்டாட்சியியல் நல்லுறவே அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்பதால், மக்கள்தொகைக்கேற்ப மக்களவைத் தொகுதிகள் எனும் வழிமுறையைக் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தலாகாது. அனைத்துப் பகுதிகளுக்கும் இடையே நியாயமான முறையில் அதிகாரம் பரவி இருப்பதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






