இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை சட்டத்தால் ‘‘ஓராண்டு சிறையில் நான் பல கொடுமைகளை அனுபவித்தேன்''; பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

‘‘இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை சட்டத்தால் ஓராண்டு சிறையில் நான் பல கொடுமைகளை அனுபவித்தேன்'', என பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்து மகிழும் சிறுமி
மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்து மகிழும் சிறுமி
Published on

அவசரநிலை பிரகடனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டி சாலையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இந்த நாள். இதே பிப்ரவரி 1-ந்தேதி தான், 45 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் சட்டத்தால் நான் கைது செய்யப்பட்டேன். ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஓராண்டு காலம் நான் சென்னை மத்திய சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது 23. அவசரநிலை பிரகடனத்தால் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், அதை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே தலைவர் கருணாநிதிதான்.

கைது செய்ய வந்த போலீசார்

அப்போது டெல்லியிலிருந்து இந்திராகாந்தி சில தூதுவர்களை அனுப்பி வைத்தபோதும், அவசர நிலை பிரகடனத்தை ஆதரிக்க முடியாது. அதை எதிர்த்தே தீருவேன்' என கருணாநிதி சொல்லிவிட்டார். மறுநாளே சென்னை கடற்கரையில் ஒரு கூட்டத்தை கூட்டி அவசர நிலை பிரகடனத்தை எதிர்க்கிறோம் என்றும், நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் வேண்டுகோளை முன்வைத்து தீர்மானத்தை இயற்றினார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்தநாள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட அடுத்தநாள் காவல் துறையினர் என்னை கைது செய்ய கோபாலபுரத்திற்கு வந்தனர். அவன் ஊரில் இல்லை. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன்', என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பல கொடுமைகளுக்கு ஆளானோம்

இந்த தகவலை அறிந்து நான் வீட்டுக்கு வேகமாக புறப்பட்டேன். மறுநாள் நான் வீட்டுக்கு வந்தவுடன் கருணாநிதி உடனடியாக கமிஷனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் மகன் வந்துவிட்டான். அழைத்துச் செல்லுங்கள்', என்று சொன்னார். காவல்துறையினரும் வந்தனர். என்னுடைய மனைவி துர்கா கலக்கத்தோடு இருந்தார். ஏனெனில் திருமணமாகி 5 மாதம் தான் ஆகிறது. கவலைப்படாதே இதுவரை கிடைக்காத சிறை அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது', என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் சிறைக்கு சென்றேன்.

நாங்கள் சிறைக்குச்சென்ற தேதியிலிருந்து பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். அங்கு இருக்கும் தி.மு.க.வினரை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கினர். அப்போது எனக்கு விழவேண்டிய அடிகளை என் அண்ணன் சிட்டிபாபு வாங்கினார். பலத்த காயம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை நடந்துமுடிந்த நேரத்தில், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு கிடைக்கிறது. அதைக் கேட்ட நாங்கள் கதறி புலம்பினோம்.

மிசா தழும்பு

இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்படும் போது, அடையாளம் காட்டச்சொல்லும் போது மிசா' தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பைக் காட்டுவேன். 50 ஆண்டுகளை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக்கொண்டு, உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின்தான் உங்களுடைய குறைகளை கேட்க வந்திருக்கிறான்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்த கொண்டிருக்கும் இந்தக் கொடுமையான, அநியாயமான, கொடுங்கோல் தன்மை கொண்ட, கொள்ளையடிக்கும் ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம். மனுக்களை எல்லாம் என்னை நம்பிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அந்த பணிகளை, ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாள், இந்த பெட்டி திறக்கப்பட்டு அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் அனைத்து கோரிக்கைகளையும் முடித்துத் தருவேன். இது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com