

சென்னை,
ராமநாதபுரத்திற்கு முதல்முறையாக தொழில் திட்டம் வரவுள்ள நிலையில், புதிய நிறுவனங்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று வரும் 17-ந் தேதியுடன் 100 நாட்களாக உள்ளது. ஆனால், அதற்குள் ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
இதில், 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் உள்ளன.
இன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சில முக்கிய திட்டங்களின் விவரம் வருமாறு:-
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்:- தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக ரூ.250 கோடி முதலீடு செய்து, 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ்:- தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார், மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்கவுள்ளது. இதற்காக ரூ.400 கோடி முதலீடு செய்து, 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அல்ட்ராவயலட்:- கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக ரூ.779 கோடி முதலீடு செய்து, 4 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
சூப்பர் மைக்ரோ:- சென்னையில், அமெரிக்காவைச் சேர்ந்த Fortune 500 (தரவரிசை 292) நிறுவனமான சூப்பர் மைக்ரோ, சர்வர்கள் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக ரூ.477 கோடி முதலீடு செய்து, 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
ஒய்.கே.கே., ஜப்பான்:- திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த ஒய்.கே.கே. நிறுவனம், ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தியாளரான ஒய்.கே.கே., இதற்காக ரூ.1,651 கோடி முதலீடு செய்து, 4,316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளது.
ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ்:- ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. குஜராத்திற்கு வெளியே இந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். இதற்காக ரூ.500 கோடி முதலீடு செய்து, 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
ஆவிட் குழுமம்:- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம், அடுத்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 12 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், மேற்கண்ட துறைகளில், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளவுள்ளது.
பிட்சர், ஜெர்மனி:- ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் முன்னணி எச்.வி.ஏ.சி. கம்ப்ரசர் உற்பத்தியாளரான பிட்சர், இந்தியாவில் தனது முதல் எச்.வி.ஏ.சி. கம்ப்ரசர்கள் உற்பத்தி ஆலையை சுமார் ரூ.300 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.
ஜெ.கே. டயர்:- ஜெ.கே. டயர் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது டயர் உற்பத்தித் திட்டத்தை ரூ.5,143 கோடி முதலீடு மற்றும் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், விரிவாக்கம் மேற்கொள்ளவுள்ளது.
டைம்லர், ஜெர்மனி:- ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், வணிக வாகனங்கள் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், ஒரகடத்தில் அமைந்துள்ள தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய பணிகளுக்காக இந்த மையத்தை மேம்படுத்தவுள்ளது.
மேற்கூறிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், கோவை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உயிரியல் அறிவியல், வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், ஆழ்தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல், ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.