பச்சிளம் குழந்தையை கொன்ற விவகாரம்: கள்ளக்காதலனை தொடர்ந்து நர்சு கைது

சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷினியை கர்ப்பமாக்கிய மதன்குமாரை கைது செய்தனர்.
பச்சிளம் குழந்தையை கொன்ற விவகாரம்: கள்ளக்காதலனை தொடர்ந்து நர்சு கைது
Published on

கன்னியாகுமரி,

நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் எஸ்.பி. காலனி பகுதியில் நேற்றுமுன்தினம் காலையில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவருக்குள் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அந்த வீட்டில் குடும்பத்தினருடன் வாடகைக்கு குடியிருக்கும் சுபாஷினி (வயது23) தனக்கு பிறந்த குழந்தையை முற்றத்தில் வீசி கொன்றது தெரிய வந்தது.

சுபாஷினிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை மற்றும் அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான மதன்குமார் (43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மதன்குமாருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் அவர் சுபாஷினியுடன் நெருங்கி பழகியுள்ளார் இதில் கர்ப்பமானார் மேலும் இந்த கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 4-ந் தேதி இரவு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. உடனே யாருக்கும் தெரியாமல் குழந்தையை வீட்டின் முற்றத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் வீசிவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதையடுத்து மறுநாள் காலையில் வீட்டின் முன் குழந்தையின் பிணம் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது.

இதற்கிடையே குழந்தையின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு சுபாஷினியை கர்ப்பமாக்கிய மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் சுபாஷினியும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் மதன்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதலனை தொடர்ந்து நர்சும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com