அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - போலீசார் விசாரணை

கோப்புப்படம்
திருத்தணியில் அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் இளங்கோ (50 வயது) என்பவர் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணியில் சுற்றி வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இளங்கோ, அந்த குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






